தான் பிரதமராக இருந்தபோது தனக்கு ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கத்திலிருந்த கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் கணவர் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருடன் ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தனது மேசையின் மீது வைத்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு போகுமாறும் “உம்மை நான் கைது செய்திருக்க வேண்டும் “என்றும் எச்சரித்து அனுப்பியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு சந்திரிகா உரையாற்றினார்.
ஒரு செயற்றிட்டம் ஒன்றைப் பெறுவதற்காகத் தனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறிய சந்திரிகா, முடிந்தவரை கொள்ளையடியுங்கள், ஆனால், சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தனது எம்பிமாருக்கு அறிவுரை கூறிய ஒரு ஜனாதிபதியும் நமது நாட்டில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதிகளைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமம் என்று தெரிவித்த திருமதி சந்திரிகா, . “அநேகமானோர் ஊழல் புரிந்திருக்கிறார்கள், ஆனால், எவருமே கைதுசெய்யப்படவில்லை. செய்றிட்டங்களைப் பெறுவதற்காக வர்த்தகர்கள் கையூட்டு கொடுப்பதால், ஊழல் பெருகும். இறுதியில் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லும். என்றும் சுட்டிக்காட்டினார்.
ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று சந்திரிகா தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.