அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? என்ற கேள்விக்கு எத்தனைபேருக்குப் பதில் தெரியும்?

ஜனாதிபதியுடன் நடந்த கூட்டத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக அவதானம் என்று எழுதுகிறார்கள். சிங்களத்தில் அவதானம் என்பது கவனத்தையும் குறிக்கும் ஆபத்தையும் குறிக்கும்.

தமிழில் அவதானம் என்பது ஒரே தடவையில் அல்லது வேளையில் பல விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்துவதைக் குறிக்கும் ஒரு வட சொல்லாகும். பீடை நாசினிகள் ஆபத்தானவை அவதானமாகக் கையாளவும் என்று சொல்வது எச்சரிக்கை செய்வதாகப் பொருள்படும். இதிலிருந்து கவனம் வேறு அவதானம் வேறு என்பது புரியும்.

கவனம், அவதானம் என்பதைப் பற்றி …விஜயா என்கின்ற வரைப்பதிவாளர் தரும் விளக்கத்தைப் படியுங்கள்

யாம் பெற்ற இன்பம் – 20

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? கவனத்திற்கும் அவதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஆராய்ந்தால், கவனம் என்பது சாதாரணமாகக் கவனிப்பது. அவதானம் என்பது கூடுதலான கவனம். அதாவது அதிக முனைப்புடன் ஒன்றைக் கவனித்தல், அவதானம் எனப்படுகின்றது. ஆனால் விழிப்புணர்வு என்பது கவனமோ, அவதானமோ அல்ல. சாதாரணமாக உலகியலில் விழிப்புணர்வு என்ற சொல் உண்மை நிலையை உற்றுநோக்குதல் என்று கருதப்படுகின்றது.

குறிப்பிட்ட விஷயத்தில் நம் கவனத்தைத் திருப்புதல் என்றும் இதைக்கூறலாம். எய்ட்ஸ் (AIDS) விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு என்றெல்லாம் சமுதாயத்தில் இந்த விழிப்புணர்வு பற்றிப் பேசப்படுகின்றது. இவையெல்லாம் நாமல்லாத பிற விடயங்கள்.

எல்லா நேரங்களிலும் ஆத்மாவுடனேயே, இணைந்து ஆத்மாவாகவே இருப்பது என்பது தான் ஆன்மீக விழிப்புணர்வின் ஆழமான பொருள். ஒரு சாதகருக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்து இருந்தால். அது அவரை ஆத்மாவில் கொண்டு சேர்க்கும். மேலும் தொடர்ந்த விழிப்புணர்வு நம்மை மன அழுத்தமில்லாமல் அமைதி நிலையில், சமநிலையில் வைத்திருக்கும்.

ஏனெனில், நடந்து முடிந்ததோ, நடக்க இருப்பதோ பற்றிய எண்ணங்கள் எதுவும் எழாமல், நிகழ்காலத்திலேயே தொடர்ந்து இருக்கும் நிலையில் மனம் அமைதிக் கடலில் ஆழ்ந்திருக்கும். ஒன்று தெரியுமா? கடந்த காலமோ, எதிர்காலமோ எதுவாயினும் அவை வெறும் எண்ணங்கள் மட்டும் தான்.

விழிப்புணர்வு நிலையில் நிகழ்காலத்தில் மட்டும் இருக்கும்போது கர்மாவின் துாண்டுதலால் எழக்கூடிய எண்ணங்கள் நம்மைத் தாக்குவதில்லை. நான் இதை மறந்துபோனேன்! அதை நான் கவனிக்கவில்லை! என்பதெல்லாம், எண்ணங்கள் கடத்திக் கொண்டு போவதால் ஏற்படுகின்ற விளைவுகள்.

உலக வாழ்க்கையில் கவனமின்மை என்பது நாம் செய்யும் தவறுகளால் உணர்த்தப்படும். ஒருவர் கார் ஓட்டிச் செல்கின்றபோது, ஏதோ ஒரு எண்ணத்தில் மூழ்கிவிட்டால், கவனம் தவறி விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. சமைக்கும்போது பொருள் கருகிப்போவது எனது எண்ணம் என்னைக் கடத்தியதால் ஏற்படும் விளைவு. இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லோருக்குமே விதம்விதமாக ஏற்பட்டிருக்கும்.

நமக்கு முன்னால் நிகழ்வதைக் கவனிக்காமல், அல்லது விழிப்புணர்வு இல்லாமல் தவறவிட்டுவிட்டுப் பிறகு வருந்துவதென்பது நாமே ஏற்படுத்திக்கொள்வது தான் என்பது விளங்குகின்றதா? எனவே கடந்தகால எண்ணமோ, எதிர்கால எண்ணமோ நம்மைக் கடத்தாமல் நிகழ்காலத்தில் இருந்து விழிப்புடன் தொடர்ந்து செயல்பட்டால் நேரடியாக ஆத்மா நம்மில் தொடர்பு கொள்ளும்.

இப்படி நாம் செய்கின்ற செயல்கள் அனைத்திலும் முழு ஈடுபாடுடன் செய்கின்றபோது அந்தச் செயல்களும் மிகத்தரமாக அமைகின்றன. சிலசமயம் நமது கட்டுப்பாடின்றிச் சட்டென்று தவறுகின்ற நேரங்களில் நம்மைத்தவறவிடாமல் தடுத்து நிறுத்திக் காப்பாற்றுகின்ற ஓர் உணர்வைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் அது நம்மைத் துாண்டிச் சரியாகச் செய்யவைக்கும்.

எண்ணம் அலைபாய்ந்து கொண்டிருக்க இயந்திர கதியால் கார் ஓட்டுகின்றபோது சட்டென்று முன்னால் செல்லும் கார் திரும்ப, அந்த நொடியில் அதைக் கவனித்து தன்னிச்சையாக நமது காரை ஒடித்துத் திருப்பி, விபத்து ஏற்படாமல் செய்து காத்தது எது?

மனம் ஏதோ ஒரு கவலையில் மூழ்கியிருக்கக் கை தன் பாட்டுக்கு சாம்பாரில் உப்பைப் போட்டுத் திரும்பப் போடப் போகின்ற நொடியில் சட்டென்று பொறி தட்டினாற் போல் ஏதோ ஒன்று கையைப் பிடித்து நிறுத்தி, போடவிடாமல் தடுக்கும். அடடா! நல்லவேளை, போடாமல் தப்பினேன்! என்று ஒரு ஆறுதல் ஏற்பட்டுத் தனக்குத்தானே மனம் நன்றி தெரிவிக்கும். அந்த நன்றி யார், யாருக்குத் தெரிவிப்பது? யோசித்துப் பாருங்கள்.

நமது உள்ளுணர்வாய் இருந்து நம்மை வழி நடத்துகின்ற இறைசக்திதான் அங்கு விழிப்புணர்வாகக் கருணையினால் செயல்பட்டு நம்மைக்காப்பாற்றுகிறது. அதனிடம் நம்மை ஒப்படைத்து வாழ்கின்றபோது அது உடனிருந்து தருணம் பார்த்து உதவுகின்றது. எதுவுமே நம் கையில் இல்லை. உயிராய் இருந்து நமக்குள் செயல்படுகின்ற அந்த இறையருள் தான் எல்லாவற்றையுமே செய்கின்றது என்பது இப்போது புரிகின்றதா?

கர்மாவைக் கழிப்பதற்காகத் தான் இந்தப் பிறவி நமக்குத் தரப்பட்டிருக்கிறது. நிகழ்வாக நமக்கு முன் வருகின்ற கர்மாவை விழிப்புணர்வுடன் நாம் எதிர்கொண்டு சரியாகக் கையாளுகின்றபோது, வருகின்ற கர்மா கழிகின்றது. அது நிகழ்ச்சியாக நிறைவேறித் தீர்ந்து விடுகின்றது. நாம் அதனை மிகச் சரியாகக் கொண்டு சென்றதால், மேலும் புதிய கர்மா ஏற்படாமல் தடுத்து விடுகின்றோம். இதற்கு ஆத்மாவுடன் தொடர்பு கொண்ட நிலையில் இருந்தால்தான் இப்படிச்சரியாக செயல்பட முடியும்.

ஆத்மாவைத் தெரிந்துகொண்டு, அதனைத் தேர்ந்தெடுத்து, அதை நோக்கித் தன்னைச் செலுத்துகின்றவர்களை அதாவது தன்னை அறிய முற்படுகிறவர்களை அது காப்பாற்றுகின்றது. பரிணாம உயர்நிலை அடையும்வரை அது இவ்வாறு உடனிருந்து காப்பாற்றும்.

இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு

Related posts