பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது.
வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்கின்றார் எனவே தான் பெண்கள் ஏதேனும் தொழில் முயற்சிகளை செய்ய வேண்டும். அதன் மூலம் வருமானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகக் கடந்த காலங்களில் நான் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
பெண்கள் சும்மா இருக்கிறார்கள் என யாரும் செல்லாதவாறு பெண்கள் வருமானம் ஈட்ட வேண்டும். என்பதே எனது இலக்கு. தமிழரசு கட்சி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. 10 வருடங்களுக்கு அதிகமாக தமிழரசு கட்சியில் இருந்துள்ளேன். அந்த வகையில் கூறுகிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சி என்று.
அதில் இருந்து தோல்வி அடைந்த பெண்ணாக இருக்க கூடாது என்பதற்காக அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டேன். தமிழ் மக்கள் கூட்டணி ஜனநாயகத்தை காப்பாற்றுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பான கட்சியாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக தமிழ் மக்கள் கூட்டணி திகழ்கிறது.
பெண்களில் இருந்து மாற்றம் வர வேண்டும் என்பதால் எனக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் எனத் தெரிவித்த திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன், தமிழ் மக்கள் கூட்டணி மூலமாகத் தான் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வந்ததும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பெண்களின் முக்கிய பிரச்சினைகளுக்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதயாகக் கூறினார்.
“தமிழரசுக் கட்சியிலிருந்துகொண்டு பெண்களுக்காகவும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். இந்தக் கட்சியைத் தமிழ் மக்கள் தமது கண்போல் காத்து வந்தார்கள். நமது கட்சி சொல்கிறதே என்பதற்காக அவர்கள் எதனையும் செய்யும் நிலையில் இருந்தார்கள். இன்று அந்தப் பெருமையை இழந்துவிட்ட ஒரு கட்சியாகத் தமிழரசுக் கட்சி மாறியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தலில் நாம் புரிந்துகொள்ள முடியும். அந்தப் புரிதலை தமிழ் மக்கள் கூட்டணியின் வெற்றியின் மூலமாகத் தெரிந்துகொள்ளும் வகையில் நான் வெற்றிவாகை சூடுவதற்கு யாழ் மாவட்ட மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் ” என்றும் திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் கூறினார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் நம் இனத்திற்காகப் போராடிய இளையோரும் இன்று போக்கிடமற்று இருப்பதை எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் உணர்ந்துகொண்டு செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு நம் சமூகத்தில் நிலவுவதை நான் அறிவேன். எனவே, அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக நமது பிள்ளைகளதும் பெண்களதும் அரணாக நான் எப்போதும் பாடுபடுவேன் என்றும் திருமதி மிதிலா குறிப்பிட்டார்.