அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் அறுகம்பே பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என்று தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.
அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை செய்வதாகக் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக டெய்லிமரர் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவலைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுற்றுவட்டாரங்கள் குறித்து எந்நேரமும் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து உடனே வெளியேறிவிடுமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. அவசரத் தேவைகளின்போது 119 என்ற பொலிஸ் அவசர இலகத்திற்கு அறிவிக்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகம், உள்ளுர் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்பாடல் கருவிகளை உரிய முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.