ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்;
“இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன்.
அதன் பின்னர், கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பல தெளிவுபடுத்தல்களை முன்வைத்திருந்ததுடன், எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து விளக்கங்களையும் சட்ட மாஅதிபருக்கு அனுப்பி, அது தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆயர்கள் பேரவையுடன் பரிமாறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட அம்பலங்களை ஆராயுமாறு என்னிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. நான் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹர்ஷ ஷோசா ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழுவை நியமித்தேன்.
மேலதிகமாக, ஏ.எம்.ஜே. டி அல்விஸ், டபிள்யூ.எம்.ஏ.என்.நிஷான் மற்றும் கே.என்.கே. சோமரத்ன மற்றுமொரு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தேன். இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்லர். இந்தக் குழுக்களுக்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆதரவை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேற்கூறிய குழுவை நியமித்ததன் நோக்கங்களில் ஒன்று, இந்திய உளவுத் துறைக்கு எந்த வகையான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தாலும் அதுகுறித்த தகவல் கிடைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வது. மேலும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா என்று விசாரிப்பது
வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைக் கொன்றது விடுதலைப் புலிகளே என அரச புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும் தெரிவித்தனர். அப்போது அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் குழு கேட்டறிந்தது.
அல்விஸ் குழு அறிக்கையானது அப்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையல்ல.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அப்துல் லத்தீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கை மேலும் பரிந்துரைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை என்பதற்கு இது நல்ல சான்றாகும். இதற்கு மேலதிகமாக, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், தற்போதைய பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, இது ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிரான இட்டுக்கட்டப்பட்ட அறிக்கை என்ற வரையறை அடிப்படையற்றது என்பது மிகவும் தெளிவாகும்.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வவுணதீவுப் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டமை தொடர்பிலான அவதானிப்புகளும் மிக முக்கியமானதாகும். அந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் விடுதலைப் புலிகளே இதற்கு பொறுப்பு என முதலில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அமைப்பே கொலைகளை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தம்பிராச குமார் மற்றும் இராசநாயகம் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அறிக்கையின் இணைப்புகளை ஆய்வு செய்யும் போது, பல முரண்பட்ட உண்மைகள் வெளிப்படுகின்றன. இந்த சம்பவத்தின் பின்னணியில் அப்போது சிறையில் இருந்த பிள்ளையான் என்ற சிவனேஷ்துரை சந்திரகாந்த் செயல்பட்டதாக புலனாய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுணதீவில் உயிரிழந்த கணேஷ் என்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணின் கணவரே கொல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மற்றுமொரு புலனாய்வு முகவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தௌஹித் ஜமாத்தின் (NTJ) செயற்பாடுகளை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடிக்க நான்கு மாதங்கள் ஆனதற்கு தேசிய புலனாய்வு அமைப்புகளிடம் தகவல்களைப் பெறுவதற்கான முறையான வலையமைப்பு இல்லாததே காரணம் என இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் (DMI) தெரிவித்துள்ளார்.
“Regarding the gap of four months until discovery of the NTJ, the DMI’s explanation was that it was attributable to the lack of network they had at the time to elicit the intelligence.”
REPORT OF THE COMMITTEE OF INQUIRY INTO INTELLIGENCE COORDINATION AND INVESTIGATIVE PROCESSES RELATED TO THE EASTER SUNDAY BOMBINGS OF 21ST APRIL 2019 (Page No 12)
வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவாக இருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதியில் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாட்டில் கடும் வீழ்ச்சி காணப்பட்டதை காணமுடிகிறது.
பலமான உளவுத்துறை வலையமைப்பு நம்மிடம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த விஷயத்தில் எனது கவனம் செலுத்தப்பட்டது. ஆயர்கள் பேரவையின் பதிலைப் பெற்று, உளவுத்துறையின் சரிவு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சட்டமன்ற அறிக்கையுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதே எனது நோக்கமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு தேசிய புலனாய்வு சேவையின் வீழ்ச்சி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய மூவர் கொண்ட குழுவின் ஊடாக உளவுத்துறை அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்க முன்மொழிவதற்கும் நான் உத்தேசித்துள்ளேன்.
தேசிய புலனாய்வு சேவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் கடுமையான சரிவு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனது கைக்கு வந்த போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதால் அந்த அறிக்கைகளை நான் பகிரங்கப்படுத்தவில்லை. இது தொடர்பில் அறிக்கை கோர வேண்டிய தேவை இருந்தமையால் மேற்படி நடைமுறையை நான் பின்பற்றியதாகவும் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனவே, ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை என்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னைப் பற்றி கர்தினால் கூறிய அனைத்து அறிக்கைகளும் ஆதாரமற்றவை. மேற்கூறிய அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகள் குறித்து ஆயர்கள் மாநாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.”