வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை உறுதிசெய்யப்படும். கிராமிய வறுமை நிலை போக்கப்படும். இளைஞர்களைப் போதைப்பழக்கத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதற்காக கையூட்டு வழங்கும் நிலை இல்லாதொழிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார.